Sunday, April 21, 2013

மாத்தி யோசி - ஒரு பக்க சிறுகதை



“சார், சொல்ரேன்ன்னு தப்பா நினைக்காதிங்க, உங்க பையன் ரவி க்கு ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வரல, பத்து வயசாகியும் சின்ன ஸ்பெலிங்லாம் கூட தப்பாதான் சொல்றான், ரொம்பா மக்கா இருக்கான்”….ன்னு பள்ளி ஆசிரியர் சொன்னதும் வங்கி அதிகாரியான பரந்தாமனுக்கு தலையில் இடி இறங்கியது போல இருந்தது. இருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல், மேற்கொண்டு என்ன செய்யலாம்னு யோசனையில் கிளம்பினார். 
தன் மகன் பற்றிய கவலையில் இருந்து சற்று விடுபட, சாயந்திரம் குடும்பத்தோடு ஷாப்பிங் கிளம்பினார் பரந்தாமன். மனைவி சமையலுக்கான பொருள்களையும், ரவி தான் விளையாடுவதற்கு உண்டான பொருள்களையும் ட்ராளி முழுவதும் நிரப்பி கொண்டு பில்லிங் கவுன்டருக்கு வந்தனர். ரவி ஒவ்வொரு பொருளாக பார்த்து எடுத்துக் கொடுக்க, கம்ப்யுட்டர் ஆப்பரெட்டர் வேகமாக பில்லிங் போட்டு கொண்டிருந்தார். “சார், 2,450 ரூபாய் பில், காஷா அல்லது கார்டா” ன்னு ஆப்பரேட்டர் கேட்டவுடன் தன் பர்சை எடுத்தார். 
“அப்பா, இவர் தப்பா பில் போட்டிருக்கார், 150 ரூபாய் அதிகமாக பில்லில் இருக்கு” ன்னு ரவி அலறினான். “இல்லடா, கம்ப்யுட்டர் பில் கரெக்டாதான் இருக்கும்”ன்னு அவனை சமாதானபடுத்திகையிலும், “இல்லப்பா, நான் ஒவ்வொரு பொருளாக அவருக்கு கொடுக்கும் போது கூட்டிக்கொண்டே வந்தேன், நான் தான் கரெக்ட்” ன்னு பிடிவாதமாக இருந்தான். கண்டிப்பாக மகன் கூட்டும்போது தப்பு பண்ணியிருப்பான்னு தெரிந்தும், அவனை விட்டுக்கொடுக்காமல் மறுபடியும் எல்லா பொருளையும் பில்லிங் போடுமாறு வற்புறுத்தினார். இந்த தடவை பரந்தாமனே உன்னிப்பாக பில்லிங்கை கவனித்தார். “சாரி சார், ஒரு ஐட்டம் டபுள் பில்லிங் ஆயிடுச்சு, 2,300 ரூபாய் கொடுங்க சார்” ன்னு ஆப்பரேட்டர் சொன்னதும், பரந்தாமனுக்கு பொறி தட்டியது, முகமும் மலர்ந்தது.
5 வருடம் கழித்து…
“நம் பள்ளியின் சார்பாக கலந்துகொண்ட ரவி, சிங்கப்பூரில் நடந்த கணித ஒலிம்பியாட் போட்டியில் உலக அளவில் முதலாவதாக வந்தமைக்காக அவரை பள்ளி நிர்வாகம் பெருமையுடன் கௌரவிக்கிறது. அவர் தந்தை பரந்தாமனை மேடையில் பேச வருமாறு அழைக்கிறோம்”.
பரந்தாமன் ஆனந்த கண்ணீரோடு பேச ஆரம்பித்தார், “ஒரு சராசரி தந்தையாக நான் இருந்திருந்தால், ஆங்கிலத்தில் மக்கா இருக்கானே ன்னு ரவி யை ஆங்கில பயிற்சிக்கு  அனுப்பியிருப்பேன். பிடிக்காத ஆங்கிலத்தை அவனும் மிகவும் கஷடப்பட்டு படிச்சு, ஒரு சுமார் நிலையைதான் எட்டியிருப்பான். ஆனால் எனக்கு என் மகனை ஒரு மக்காக எண்ண ஒரு போதும் மனது ஒப்புக்கொள்ளவில்லை. அவனிடம் கண்டிப்பாக திறமை இருக்குன்னு நம்பினேன். அப்போதுதான் அவனுக்கு கணிதம் மிக லாவகமாக வருவதை கண்டுபிடித்தேன். ஆங்கிலத்திற்கு பதிலாக அவனுக்கு கணிதத்தில் பயிற்சி கொடுத்தேன். இன்று உலக அளவில் முதலாவனதாக வந்திருக்கிறான். எதில் திறமை இருக்கிறதோ அதில் கவனம் செய்யுங்கள், கண்டிப்பாக முதலாவதாக வருவீர்கள், என் மகனே உதாரணம்” ன்னு பேச்சை முடிக்க கரவோஷம் அடங்க வெகு நேரமானது.